ஹரக்கட்டாவின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவைக் கைது செய்யச் சென்ற போது வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் , உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு 15 இலட்சம் ரூபாவை வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவருக்கு காவல்துறை மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாத்தறை – வெலிகம – பெலன பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையின் போது குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
கலேவெல – அடகல பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதான இவர் , கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் சார்ஜன்ட் ஆவார்.
இதேவேளை, ஹரக்கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று திங்கட்கிழமை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மாத்தறை – மிதிகம பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் அண்மையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரக்கட்டாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.