-யாழ் நிருபர்-
இலங்கை மின்சார சபையின் சுன்னாக கிளையின் பிரதான பொறியியலாளர் லிங்கறூபனின் தவறான வழிநடத்தலினால் தனது வீட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட நபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார் .
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பளைப் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மின்சார சபையினால் மின் துண்டிக்கப்பட்ட தனது வீட்டை மனைவியின் மருத்துவச் செலவுக்காக ஒரு தொகை பணத்துக்காக அடகு வைத்துள்ளார்.
இவ்வாறான நிலையில் அடகு வாங்கிய பளைப் பிரதேசத்தை சேர்ந்த நபர் வீட்டில் இருப்பவர்களை அப்புறப்படுத்தி வீட்டை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
அதன் ஒரு அங்கமாக தனது பெயருக்கு மாற்றப்பட்ட அடகு உறுதியை சுன்னாக மின்சார சபை பணிமனையில் காண்பித்து உயர் அதிகாரி ஒருவரின் அனுமதியுடன் குறித்த வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டவர் குறித்த அடகு காரரிடம் தனது வீட்டை மீட்பதற்கு வாங்கிய பணத்தையும் அதற்கான வட்டியையும் செலுத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக பலமுறை தெரிவித்தும் அவர் அதனை வாங்குவதற்கு தயாரக இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
ஏனெனில் தற்போதைய வீட்டுடன் சேர்ந்த காணியின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில் அடகு வைத்தவர் அதனை கொடுப்பதற்கு பின்னடித்து வருவதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார் .
தமது வீட்டின் மின்சார பட்டியல் இன்றுவரை தமது பெயரிலே வருவதாக தெரிவித்த நிலையில் அவ்வாறு மின்சார சபை அதிகாரி முன் அறிவித்தலும் இன்றி தமது மின்சாரத்தை துண்டிக்க முடியும் என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இவ்வாறான நிலையில் இலங்கை மின்சார சபையின் சுன்னாக கிளையின் பிரதம பொறியியலாளரான லிங்கரூபனுக்கும் கந்துவெட்டிக்காரருக்கும் ஏதோ ஒரு’ டீல்’ இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மக்களுக்கு சேவை வழங்கும் அரச நிறுவனங்களில் ஒன்றான இலங்கை மின்சார சபையை அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகக் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் வீட்டின் மின் இணைப்பு துண்டித்தமை வருத்தம் அளிக்கிறது.
ஆகவே அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நீதியற்ற செயற்பாட்டிற்கு நீதியைப் பெற்றுத் தருமாறு மனித உரிமை ஆணைக்குழுவில் பதிக்கப்பட்டவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது செய்யப்பட்டுள்ளது.
