தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் செயலாளர் என தெரிவித்து, இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் அவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் விவசாய துறையில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து, காலி மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் உள்ள இருவரிடம் தலா 3 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டதாக தெரிவித்து, அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் நாளை ஞாயிற்றுக்கிழமை மாத்தறை நீதவானிடம் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடம் இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக எவரேனும் பணம் வழங்கி இருந்தால், 011 286 42 41 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.