தேன் எடுப்பதற்காக வனப்பகுதிக்கு சென்ற இளைஞர் ஒருவர், கற்பாறையில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார் .
மடுல்சீமை மாதொவ கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தமது ஊரில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் தேன் எடுப்பதற்காக நேற்று ஞாயிற்று கிழமை மாலை மூவர் சென்றுள்ளனர்.
கற்பாறை பகுதியில் இருந்த தேனை எடுப்பதற்காக, மரத்தில் கயிற்றை கட்டி இளைஞர் ஒருவர் இறங்கியுள்ளார்.
அவர் தேன் ராட்டை வெட்டி போடும்போது அதனை பாத்திரத்தில் சேகரிக்க கீழ் பகுதியில் மற்றுமொருவர் இருந்துள்ளார். முதலாவது தேன் ராட்டை வெட்டி எடுத்து, பாத்திரத்தில் போடும் போது தேன் பாறையி வழிந்துள்ளது. இரண்டாவது ராட்டை வெட்டி போடப்பட்ட போது, அதனை சேகரிப்பதற்காக கீழ் பகுதியில் இருந்தவர் முற்படுகையில் தேனில் கால் வைத்து வழுக்கி 100 அடி பள்ளத்தில் விழுந்தார் என அவருடன் சென்றவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் முச்சக்கர வண்டியில் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர்.
சடலம் பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.