கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு 10 மணியளவில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு வந்தன் பின்னர் அந்த நபர் கடையை விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று சற்று நேரத்தில் சத்தம் கேட்டுள்ளது. அதன் பின்னர் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடினர். இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என பொலிசாரின் விசாரணைக்கு சம்பவத்தை அவதானித்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் குற்றத்தடுப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
மரணம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.