சமூக ஊடகங்கள் மூலம் பல இலங்கை பெண்களிடம் பணம் மோசடி செய்த விவகாரத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நைஜீரிய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரிடமும் கடவுச்சீட்டுகள் இல்லையென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு 03 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை அனைத்தும் பெண்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
19/01/2023 அன்று 1,045,000 ரூபாவும் 07/03/2023 அன்று 10,222,634 ரூபாவும் மற்றும் 06/07/2023 அன்று 18,531,676 ரூபாவும் மோசடி செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடகப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சந்தேக நபர்களால் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு தன்னை வைத்தியர் என கூறி பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பெண்களிடம் காதல் உறவில் ஈடுபட்டு பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
மற்றைய பெண் கார் ஒன்றை வென்றுள்ளதாக குறிப்பிட்டு மோசடி செய்யப்பட்டுள்ளார்
இது தொடர்பில் நீதிமன்றில் உண்மைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வங்கிக் கணக்குகள் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து அளுத்கம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளின் படி, இருவர் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து 14 ஏடிஎம் அட்டைகள் மற்றும் 05 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.