வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று நடைபெறுகிறது.
மாலை 6:51 இற்கு பெரஹெரா வீதி வலம் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை 30 ஆம் திகதி முதல் கும்பல் பெரஹெராவுடன் தொடங்கிய திருவிழா, கடந்த 9 நாள்களாக வீதி வலம் வந்து, இன்று 10ஆவது நாளாக இறுதி ரந்தோலி பெரஹெராவுடன் நிறைவடைவதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்துள்ளார்.
பெரஹெராவில் பங்கேற்கும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இலங்கை ரயில்வே திணைக்களம் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கிறது.
கொழும்பு-கோட்டை, கண்டி, மாத்தளை ஆகிய பகுதிகளிலிருந்து இன்று பல விசேட ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார் .
இதேநேரம் இறுதி ரந்தோலி பெரஹெராவில் பங்கேற்பவர்களின் பாதுகாப்புக்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து திட்டத்தை செயற்படுத்தியுள்ளனர் .
இதில் வீதித் தடைகள், வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டல் மற்றும் வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
பெரஹெரா செல்லும் வீதிகளில் ட்ரோன் இயக்கங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இறுதி ரந்தோலி பெரஹெராவில் அலங்கரிக்கப்பட்ட யானைகள், பாரம்பரிய கண்டிய நடனக் கலைஞர்கள், தீச்சாலை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் குழுவினர் பங்கேற்கின்றனர்.
நாளைய தினம் நீர் வெட்டும் விழா மற்றும் பகல் பெரஹெராவுடன் கண்டி எசல பெரஹெரா நிறைவடைகிறது ..