-திருகோணமலை நிருபர்–
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இடைவிலகிய இராணுவ வீரரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தின் போது மொரவெவ-தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ரொஷான் திலின (22 வயது) படுகாயம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இராணுவத்திலிருந்து இடை விலகிய இராணுவ வீரர்களை கைது செய்வதற்காக திருகோணமலை இராணுவ முகாமிலிருந்து கெப் வாகனத்தில் சென்று குறித்த இடைவிலகிய இராணுவ வீரர்களை ஏற்றுச் செல்லும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த விபத்தில் இடை விலகிய இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதுடன் மற்றுமொரு இராணுவ வீரர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த கெப் வாகனத்தின் சாரதியான இராணுவ வீரரை கைது செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.