இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடாத்தியது ஊடக சந்திப்பா?

மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் உட்பட இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைது சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டு ஊடக அமையத்தில் இடமபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது இரு பக்க நியாயங்களையும் கேட்க வேண்டும். அப்படி இல்லாது கண்டபடி செய்திகளை போட கூடாது என தெரிவித்திருந்தார்.

நேற்று குறித்த கைது சம்பவம் இடம்பெற்ற தகவல் கிடைத்தவுடன் எமது செய்தி சேவையிலிருந்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் ஒரு அழைப்பிற்கும் பதிலளிக்கவில்லை.

இவ்வாறு இருக்கும் போது அவர்கள் பக்க நியாயத்தை எவ்வாறு நாங்கள் உறுதிப்படுத்த முடியும்?

மேலும் இன்று ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த இராஜாங்க அமைச்சர் ஊடக சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் ஊடக சந்திப்பை அவரது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் நேரலை செய்திருந்தார்.

இவ்வாறு ஊடக சந்திப்பு என்று ஊடகவியலாளர்களை அழைத்து அமர வைத்து விட்டு தங்களது கருத்துக்களை தங்களது சொந்த சமூகவலைத்தள பக்கங்களில் சொல்வதென்றால் அது ஒரு ஊடக சந்திப்பு என்று எடுத்துக்கொள்ள முடியாது.

அவரது கருத்தை சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு அவரே சொல்லும் போது இங்கு ஊடகங்களுக்கு என்ன வேலை இருக்கிறது? அவரது கருத்துக்களை ஊடகங்கள் மறுஒளிபரப்பு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?

ஆகவே பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் ஊடகங்களை இவ்வாறு நடத்துவது கண்டிக்கத்தக்க விடயம் என்பதை எமது ஊடகம் இங்கு சுட்டிக்காட்ட விளைகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்