இயற்கை சூழலை அசிங்கப்படுத்தாமல் எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டும்

-வவுணதீவு திருபர்-

இயற்கைச் சூழலை அசிங்கப்படுத்தாமல் எதிர்கால சந்ததிக்கு அழகுபடுத்திக் கையளிக்க வேண்டியது தற்போது இந்த உலகில் உயிருடன் வாழும் அனைவரினதும் பொறுப்பாகும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹபீப் முஹம்மது பாத்திமா சர்மிலா தெரிவித்தார்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வழிநடத்தலில் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலோடு இயற்கையைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேச இளைஞர் யுவதிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கத்திற்கமைய ஒழுங்கு செய்யப்பட்ட கடற்கரையோரங்களிலிருந்து பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் சிரமதானப் பணிகள் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை நெடுகிலும் மேற்கொள்ளப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர் பாத்திமா சர்மிலா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்தகடற்கரையோர துப்புரவாக்கல் சிரமதானப்பணியின்போது பெருந்தொகையான பிளாஸ்ரிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் கருத்துத் தெரிவித்த ஒருங்கிணைப்பாளர் பாத்திமா சர்மிலா

கடலும் கடல்சார்ந்த பிரதேசங்களும் வாவியும் ஆறு குளம் உட்பட மற்றுமுள்ள நீரேந்துப் பகுதிகளும் மனதிற்கிசைந்த ரம்மியமான இடங்கள். அத்தோடு அந்த இடங்கள் பொதுவானவை.

எனவே இங்கு மனிதர்களால் அறியாமையின் காரணமாக உக்காத பிளாஸ்ரிக் கழிவுகள் வீசப்படுகின்றன, அவை இயற்கைக்கும் மனிதர்களுக்கும் மற்றைய உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவை.

இவை கடல் வாவி போன்ற நீர் நிலைகளில் கலப்பதால் ஒட்டு மொத்த நீர்வாழ் மற்றும் நீரேந்துப் பகுதிகளை அண்டி வாழும் உயிரினங்களும் அழிவடைகின்றன, இதனால் பல்வகை உயிரினத் தன்மை இல்லாமல் போகிறது.

இயற்கை இன்றி மனிதர்கள் வாழ முடியாது. எதிர்கால சந்ததிக்கு இந்த இயற்கைச் சூழலை அசிங்கப்படுத்தாமல் அழகுபடுத்திக் கையளிக்க வேண்டும்.

இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதத்தில் இளையோர் சமுதாயத்தை விழிப்புணர்வூட்டி வருகின்றோம், இதில் மூத்தோரும் பங்கெடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.