
இன்றோடு 19 வருடங்கள்
ஆறாத காயங்களை ஏற்படுத்திய ஆழி பேரலை பல உயிர்களை காவு கொண்டு இன்றோடு 19 வருடங்கள் ஆகிவிட்டது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இன்று போல் ஒரு பூரணை தினத்தில் உலக வாழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய பேரனர்த்தம் தான் ஆழிப் பேரலை.
2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் நத்தார் தினத்தின் அடுத்த நாளில் பூரணை தினம் வருவது இதுவே முதல் முறையாகும்.
2004 ஆம் ஆண்டு நத்தாருக்கு மறுதினம் காலை 6.58 மணியளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடற்சீற்றத்தினால் ஆசியாவின் 14 நாடுகளைச் சேர்ந்த 2 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
இலங்கையில் காலி மாவட்டத்தின் பெரலிய என்ற இடத்தில் பயணித்த ரயிலில் இருந்த 1,700 பேருடன் சேர்த்து, நாட்டில் 40,000 மக்கள் வரை உயிரிழந்தனர்.
இலங்கை ரயில் சேவையில் ஏற்பட்ட விபத்துகளில் அதிகளவான உயிர்களை காவு கொண்ட விபத்து இதுவென இலங்கை ரயில் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
