இந்த வருடத்தில் இதுவரை 55 டெங்கு மரணங்கள்
இந்த மாதம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை பதிவான அதிகூடிய டெங்கு நோயாளர்கள் இதுவாகும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கைகளின்படி, இம்மாதம் இதுவரையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10,088 ஆகும்.
அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை 55 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த நவம்பரில் 7995 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், டிசம்பரில் 2093 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 86,576 ஆகும். அவர்களில் 45 வீதம் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன.
இதேவேளை, கடந்த மே மாதம் முதல் இலங்கையில் இருந்து 700க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
