கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படும் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் தரத்தை நோக்கிய வீறு நடை மற்றும் ஆயுள்வேத துறை சார் ஆய்வுகளை மேற்கொண்டு சுதேச மருத்துவத்தை மக்கள் மயமாக்கும் கருத்தியலுக்கு அமைவாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் மீளாய்வு கூட்டம் நேற்று புதன் கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த மீளாய்வு கூட்டத்தில் ஆயுர்வேத வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் நேரடியாக கேட்டறிந்து கொண்டதுடன் ஆயுர்வேத வைத்திய துறையை மக்கள் மயமாக்கி அதனூடாக ஆயுர்வேத உற்பத்திகளை அதிகரிப்பதற்கும் மக்களுக்கு ஆயுர்வேதத்துறை மீதான நம்பிக்கையை மேலும் கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை எடுப்பதுடன் பாரம்பரிய மருத்துவம் பற்றிய ஆய்வுகளை செய்வதற்கு முன்வர வேண்டும் எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானங்கள் எட்டப்பட்டிருந்தன.
குறித்த நிகழ்வில் ஒரு அங்கமாக கல்முனை பிராந்திய ஆயுள்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.நபீளினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட நூல் வெளியீட்டு விழா கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் திருமதி ஆர்.எப்.றிஸ்மியா எழுதிய அறிவும் ஆரோக்கியமும் என்ற நூலே இதன் போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் கௌரவ அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன் நூல் விமர்சன உரையையும் நிகழ்த்தி இருந்தார்.
ஆயுள்வேத வைத்திய அத்தியச்சகர்கள் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது நூலின் முதல் பிரதியை நூலாசிரியர் டொக்டர் றிஸ்மியா கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சகலருக்கும் அதிதிகளினால் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.