இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நவம்பர் 15ஆம் திகதி முதல் மெல்பேர்னுக்கான வாராந்த விமான சேவைகளை மேலும் மூன்றால் அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கான தனது மொத்த வாராந்த விமான சேவைகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிப்பதாக தேசிய விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேலதிகமாக அறிமுகப்படுத்தப்படும் மெல்பேர்ன் விமான சேவைகள் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள தினசரி விமான சேவைகளுக்கு மேலதிகமாக இந்தப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
புதிய அட்டவணையின்படி, UL608 விமானம் கொழும்பிலிருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு மெல்பேர்னைச் சென்றடையும். மீண்டும் மெல்பேர்னிலிருந்து புறப்படும் UL609 விமானம் காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு நண்பகல் 12.10 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
இதனுடன், ஏற்கனவே நடைமுறையில் உள்ள மெல்பேர்னுக்கான தினசரி விமான சேவையும் தொடரும். UL604 விமானம் கொழும்பிலிருந்து அதிகாலை 12.35 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு மெல்பேர்னைச் சென்றடையும். UL605 என்ற திரும்பும் விமானம் மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
ஓய்வுக்காகப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் புலம்பெயர் சமூகத்தினர் ஆகியோரின் பயணத் தேவைகள் அதிகரித்து வருவதால், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக அவுஸ்திரேலியா உருவெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மேலதிக விமான சேவைகள் மூலம் கொழும்பு ஊடாக லண்டன், சென்னை, டெல்லி மற்றும் மாலே உள்ளிட்ட நகரங்களுக்குப் பயணிக்கும் பயணிகளுக்கு காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பங்காளி விமான நிறுவனங்கள் ஊடாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் ஏனைய நகரங்களுக்கான இணைப்பு விமான சேவைகளும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விமான சரக்குப் போக்குவரத்துக்கான கொள்ளளவு அதிகரிப்பதுடன், விரைவான இணைப்பு வசதிகளும் கிடைக்கும் என விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, மெல்பேர்னிலிருந்து கொழும்பு ஊடாக மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு இதன் மூலம் நன்மை கிடைக்கும்.
இந்த விரிவாக்கத்தின் பின்னர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவுஸ்திரேலியாவுக்கு வாராந்தம் 14 விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இதில் மெல்பேர்னுக்கு 10 சேவைகளும் சிட்னிக்கு 4 சேவைகளும் உள்ளடங்குகின்றன.










