-அம்பாறை நிருபர்-
அம்பாறையில் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
நாவிதன்வெளி ,கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்துபாதைகள் சில வெள்ளக்காடாக காட்சி தருவதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது.
பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு வரை காலை வேளையில் அண்மையில் பனி மூட்டம் காணப்பட்ட போதிலும் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் பலத்த காற்று வீசி வருகின்றது.
இது தவிர கடல் பிராந்தியங்களில் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதனால் மீனவர்கள் மீன் பிடிப்பதில் இருந்து தவிர்ந்து வருகின்றனர்.இதேநேரம் மழை வீழ்ச்சி இடைவிடாது பெய்து வருகின்ற நிலையில் நீர்நிலைகள் யாவும் நீரால் நிரம்பியுள்ளதுடன் சில தாழ்நில நெற் செய்கை வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது
பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்களின் முன்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது.
ஏனைய போகங்களை விட இப்பெரும் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளதால் பாரிய நஸ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அடுத்த சிறுபோகத்தில் மீண்டும் எவ்வாறு நெற்செய்கையில் ஈடுபடுவது என்பது பற்றி பிரதேச விவசாயிகள் பெரும் கவலையினை தெரிவித்தனர்.

