-மன்னார் நிருபர்-
அபிவிருத்தி எனும் பெயரில் எமது மாவட்டத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும், அழிக்கப் படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் கறிராஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் வாழ்வுதயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கறிராஸ்-வாழ்வுதயம் நிறுவனமானது ‘இயற்கை வளங்களை பாதுகாப்போம்’ எனும் திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தி வருகின்றது. இக்காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தின் இயற்கை வள சுரண்டல்கள், இயற்கை வள அழிப்புகள் பல அதிகாரிகளின் கவனத்திற்கும் துரித செயற்பாடுகளுக்கும் கொண்டுவருவதோடு மக்களுக்கு இதுபற்றித் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் உள்ளதை உணர்ந்த படியினாலேயே இந்த ஊடகச் சந்திப்பானது உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அபிவிருத்தி எனும் பெயரில் எமது மாவட்டத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும், அழிக்கப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது.
மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களுக்கு அச்சுறுத்தலான முக்கிய விடயங்களை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கனியவள அகழ்வு, காற்றாலை திட்டம், சட்டவிரோத மண் அகழ்வு இந்திய இழுவைப் படகுகளில் அத்து மீறிய நுழைவு, காடழிப்பு, கடலோர கண்டல் தாவரங்கள் அழிப்பு,வனவிலங்குகள் சரணாலயத்திற்கு சொந்தமான காணிகள் தனி நபர்களினால் அபகரிக்கப்படுதல் என்பனவாகும்.
இவற்றினால் நாம் எதிர்நோக்கும் பாரிய விளைவுகள், பேரழிவுகள் பற்றி மக்கள் தெளிவடைய வேண்டும்.சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்புடைய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு வினையமாக கேட்டுக்கொள்கிறோம். அதேவேளை, தொண்டு நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும், இயற்கைவள பாதுகாப்பு செயற்பாட்டாளர்களும், இயற்கைவள சட்டவாளர்களும், பொதுமக்களும் இணைந்து செயலாற்றுவதற்கு அழைப்பு விடுக்கிறோம்.
இயற்கையைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எமது முழுமையான ஒத்துழைப்பு இருக்குமென கூறிக்கொள்கிறோம். என தெரிவித்தார்.