அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்து காணி பத்திரங்களை எரித்து நகைகள் கொள்ளை

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தி, அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவரது காணி உறுதிப் பத்திரங்களையும் தீயிட்டுக் கொழுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் சேற்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அதிகாலையில் வேளை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

அதன்பின் தூக்கிக்கொண்டிருந்த 68 வயதுடைய வயோதிப் பெண் மீது தாக்குதல் நடாத்தி, தங்க தோடு, தாலி ஆகியவற்றை கொள்ளையிட்டதுடன் அவரிடம் இருந்த பத்தாயிரம் ரூபா பணத்தையும் பறித்தெடுத்தனர்.

அதன்பின்னர், அவரிடம் உன்னுடைய காணிகளின் பத்திரங்களை தா என மிரட்டியுள்ளனர். குறிப்பாக அண்மையில் கொள்வனவு செய்த காணியின் உறுதிப் பத்திரத்தை கோரியுள்ளனர். அப்போது அச்சத்தில் குறித்த வயோதிப பெண் காணிகளின் உறுதிப் பத்திரங்களைக் காண்பிக்க அதனை தீயிட்டு கொழுத்தியதுடன் அவரது உடைகளையும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

மேலும், குறித்த பெண் அண்மையில் கொள்வனவு செய்த காணியில் புதிதாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெறுவதாகவும், அதற்கான பணம் எங்கே இருக்கிறது என்றும் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதற்கு அவர், இருந்த காசில்தான் கற்களை பறித்து வேலை செய்யத்தொடங்கியுள்ளோம் என்று கூற பொய் சொல்வதாக கூறி தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த வயோதிப பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

புதிதாக கொள்வனவு செய்த காணியில் இரவுக் காவலிற்காக தங்கியிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அதிகாலை 5 மணியயளவில் வீட்டிற்கு வந்தபோது, தனது மனைவி இரத்த காயங்களுடன் கிடந்ததைக் கண்டு உடனடியாக அயலவர் உதவியுடன் மனைவியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்