இந்தியாவில் சொத்துக்காக அண்ணனின் மனைவியை ஒருவர் கொலை செய்து ஆழ்துளை கிணற்றில் புதைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்தது வந்த ஆரோக்கியமேரி (வயது – 37) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரின் மகன்களான சேவியர் (வயது – 42) மற்றும் ராயப்பன் (வயது – 38) ஆகிய இரண்டு மகன்களுக்கும் சரிசமமாக பிரித்துக் கொண்டனர்.
இவர்களுல் சேவியருக்கு திருமணமாகி அவருக்கு குழந்தைகள் இல்லை. ராயப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2 வருடத்திற்கு முன்பு சேவியர் இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, சேவியர் மனைவி ஆரோக்கியமேரி தனது கணவர் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி எழுதி வைத்துக் கொண்டார்.
இதனால், அதுகுறித்து ஆரோக்கியமேரிக்கும், அவரது கொழுந்தனாரான ராயப்பனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது, ‘உனக்கு தான் குழந்தை இல்லையே எதற்கு என் அண்ணன் பெயரில் இருந்து நிலத்தை உன் பெயருக்கு மாற்றினாய்?.
ஒழுங்காக அந்த சொத்துகளை என் பெயருக்கு எழுதி கொடுத்துவிடு. இல்லையென்றால் நடக்கிறதே வேறு. நான் சொல்கிறபடி நடக்காவிட்டால் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன்’ என்று அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் புதன் கிழமை மாலை ஆரோக்கியமேரி தனது நிலத்தில் விவசாயம் செய்துள்ள நெற்கதிர் வயல்களில் மயில் விரட்டிக் கொண்டிருந்தார். அப்போது, ஆரோக்கியமேரியின் அண்ணன் சகாயராஜ் மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்தில் இருந்து போனில் பேசியுள்ளார்.
பின்னர், மாலை 7 மணியளவில் அவர் தனது தங்கைக்கு அழைப்பை எடுத்த போது அவரது தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பலமுறை பேச முயன்றும் பேச முடியாததால் ஆரோக்கியமேரியின் வீட்டருகே உள்ளவர்களுக்கு ஏற்படுத்தி வயலுக்கு சென்று தேடி பார்க்க சொல்லி உள்ளார்.
பின்னர், அவர்கள் அங்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை. இதனால், சந்தேகமடைந்த சகோதரர் அவரது உறவினருடன் கருங்குளத்தில் இருந்து புறப்பட்டு ஆம்பூர்பட்டிக்கு வந்து வயல் பகுதியில் உள்ள கிணறு, மரம், வயல்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அன்று இரவே இதுகுறித்து மாத்தூர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர், நேற்று காலை அவரது உறவினர்கள் ஆரோக்கியமேரியின் வயல் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் புதிதாக மண் போட்டு மூடி இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்து இது குறித்து மாத்தூர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் உடல் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் போது நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வயலில் இருந்த ஆரோக்கியமேரியை அவரது கொழுந்தன் ராயப்பன் கொலை செய்து உடலை அவரது டிராக்டர் கொலுவில் வைத்து எடுத்து சென்று அங்கிருந்து 100 மீட்டர் தூரமுள்ள மூக்கன் காட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சொருகி புதைத்து விட்டு பின்னர் டிராக்டரை வீட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார் என்று தெரிய வந்துள்ளது.
மேலும், பொலிஸார் ராயப்பனின் தாய் சின்னம்மாள், மனைவி லிவிட்டியாமேரி ஆகியோரிடம் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

