அடுத்த ஆண்டுக்கான அஸ்வெசும பயனாளர்கள் தேர்விற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் கோரப்படும் என ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும வேலைத்திட்டத்தில், ஆண்டுதோறும் தகுதியுடையவர்களை உள்வாங்கும் மற்றும் தகுதியற்றவர்களை நீக்கும் செயல்முறையும் அடங்குகின்றது.
அதன்படி, 1.2 மில்லியன் மக்களை உற்பத்திப் பொருளாதாரத்துடன் இணைத்து அவர்களை வலுவூட்டுவதுடன் இது தொடர்பான 03 வருட திட்டம் இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பவுள்ளது.
நாட்டிலுள்ள 18 இலட்சம் சமுர்த்திப் பயனாளர்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வயது முதிர்ந்தவர்கள். இவர்கள் இளமையில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டாலும் 60 வயதை கடந்த பின்னரே சமுர்த்தி வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளனர். அது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதுடன், சமூக பாதுகாப்பு சபையின் பங்களிப்புடன் ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 18 வயது முதல் 05 வருடங்கள் இதற்கு பங்களிப்பு செய்தவருக்கு 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கும். அந்த பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்க முடியும் என்பதுடன், பங்களிப்பு காலத்தைப் பொறுத்து ஓய்வூதியத்தை அதிகரிக்கலாம்.
இந்த முழுத் திட்டத்திற்கும், சீனா, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சமுர்த்தி வங்கி கட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும வேலைத்திட்டத்தின் ஊடாக சமுர்த்தி வேலைத்திட்டம் மற்றும் சமுர்த்தி வங்கி கட்டமைப்பு என்பன மிகவும் செயற்திறனுடன் முன்னெடுக்கப்படுவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.