அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற 40ஆவது தேசிய கபடிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த வாழைச்சேனை-கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலய மாணவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உள்ளிட்டவர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றான கோரகல்லிமடு கிராமத்தைச் சேர்ந்த இம்மாணவிகள், மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மற்றும் வசதிகளுக்கு மத்தியிலும் அகில இலங்கை மட்டத்திலான போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளமை பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
கோரகல்லிமடு கணேஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தலைமையில், கோரகல்லிமடு புதிய பாதை அமைப்பினரின் பொதுமண்டபத்தில் நடைபெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன்போது, வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சு. சுதாகரன், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன், பாடசாலை அதிபர், விளையாட்டுக் கழக நிர்வாகத்தினர், பயிற்றுவிப்பாளர்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மாணவிகளை பாராட்டி கௌரவித்தனர்.
இதன்போது, போட்டியில் சாதனை படைத்த மாணவிகளுக்கும், அவர்களை வழிநடத்தி பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் தெரிவிக்கையில்,
நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமமொன்றில் அமைந்துள்ள பாடசாலை மாணவிகள் அகில இலங்கை மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருப்பது சாதாரணமான விடயமல்ல.
போதிய பயிற்சி வசதிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வளங்கள் கிடைத்திருந்தால் இம்மாணவிகள் முதலிடத்தையும் பெற்றிருக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள், ஒரேயொரு புள்ளி வித்தியாசத்திலேயே முதலிடத்தைத் தவறவிட்டுள்ளனர்.
மேலும், எதிர்காலத்தில் இம்மாணவிகளுக்குத் தேவையான வளங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெறுவதற்குத் எம்மால் இயன்ற உதவிகளை வழங்க தயாராக உள்ளோம்.
அதேவேளை, புலம்பெயர் தமிழ் உறவுகளும் இவ்வாறான கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான பயிற்சி மற்றும் விளையாட்டு வளங்களை வழங்குவதற்கும் முன்வர வேண்டும்.
போதிய வசதிகளின்றி தமது திறமையாலும் விடாமுயற்சியாலும் தேசிய மட்டத்தில் சாதித்துள்ள கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலய மாணவிகளின் வெற்றி, கிராமப்புற மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது, என தெரிவித்தனர்.










