இலங்கையின் ரயில்வே அஞ்சல் சேவையில் கடந்த ஒரு நூற்றாண்டாகப் பணியாற்றி வரும் காலி இரவு அஞ்சல் ரயில் தனது 100ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியுள்ளது.
காலி பயண அஞ்சல் அலுவலக ரயில் (Galle Travelling Post Office) நேற்று செவ்வாய்க்கிழமை தனது 100 ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ளது.
இதனை முன்னிட்டு நள்ளிரவு காலி ரயில் நிலையத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கரையோர ரயில் பாதையில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் ரயிலின் இறுதி நிறுத்தமாக விளங்கும் காலி ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், காலி தபால் அலுவலகம் மற்றும் ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், தபால் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, ரயிலின் 100 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் வகையில் விசேட ஆண்டு நிறைவுக் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
குறிப்பாக, தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக அஞ்சல் சேவைகளை வழங்கி வந்த இந்த ரயிலின் நூற்றாண்டு காலப் பங்களிப்பும் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டது.










