இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்கான ஒப்பந்தத்தின் வரைபுக்கு தாய்லாந்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த ஒப்பந்த வரைபுக்கு தாய்லாந்து அமைச்சரவை நேற்று செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியதாக அந்நாட்டு அரசாங்கத்தின் பிரதி பேச்சாளர் பிளோய்தலாய் லக்சமீசாங்ஜான் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கு அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதிக்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது. அத்துடன், ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வெளிவிவகார அமைச்சுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், இரு நாடுகளின் சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் மற்றைய நாட்டிற்குள் நுழையும்போதும், வெளியேறும்போதும் அல்லது அந்நாட்டின் ஊடாகப் பயணிக்கும்போதும் ஒரு தடவைக்கு அதிகபட்சம் 30 நாட்கள் வரை விசா இன்றி தங்கியிருக்க முடியும்.
எனினும், 180 நாட்கள் கொண்ட காலப்பகுதியில் மொத்தமாக 90 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. 30 நாட்களுக்கு மேல் தங்க விரும்புவோர், வேலைவாய்ப்பில் ஈடுபடுவோர், கல்வி கற்க விரும்புவோர் அல்லது முன்கூட்டிய அனுமதி தேவைப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உரிய விசாவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொது ஒழுங்கு, பொதுச் சுகாதாரம் அல்லது தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடைநிறுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமாயின், குறைந்தது 30 நாட்களுக்கு முன்னர் இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக எழுத்துமூலம் அறிவிக்கப்பட வேண்டும்.
இரு நாடுகளும் தமது உள்நாட்டு நடைமுறைகளை நிறைவு செய்துள்ளதாக இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக இறுதியாக எழுத்துமூலம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 60ஆவது நாளில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். அதேவேளை, ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் தரப்பினர் எழுத்துமூலம் அறிவிக்க முடியும். அவ்வாறு அறிவிக்கப்பட்டதை மற்றைய தரப்பு பெற்றுக்கொண்ட 90ஆவது நாளில் ஒப்பந்தம் முடிவுக்கு வரும்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை இலகுபடுத்துவதுடன், நெருக்கமான பௌத்த மற்றும் கலாசார உறவுகளைக் கொண்ட இரு நாடுகளின் மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என பிளோய்தலாய் தெரிவித்துள்ளார்.
மேலும், குறிப்பாக கலாசார சுற்றுலா மற்றும் மதம் சார்ந்த நடவடிக்கைகள் உள்ளிட்ட தாய்லாந்தின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் இந்த ஒப்பந்தம் பங்களிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.










