அநுராதபுரம் ருவான்வெலிசாயவுக்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட 25 இற்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தத் தவறியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு, அநுராதபுரம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு (SSP) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அவர் நேரடியாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பௌத்த பிக்குகள், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான இந்திக இம்புல்பிட்டிய மற்றும் நுவன் பல்லந்துடாவ ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனுவை நிராகரித்த அநுராதபுரம் பிரதம நீதவான் சியாபத் சசிந்து விக்ரமரத்ன, நேற்று செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற விசாரணையின்போது, மோதலைத் தூண்டியதாகக் கூறப்படும் ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட 25 இற்கும் மேற்பட்டோர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், மோதலைத் தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தும் பொலிஸார் அதனைத் தடுக்கத் தவறியதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன், காணொளி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, குறித்த சம்பவத்தை வழிநடத்துவதில் பொலிஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்வைத்தனர்.
இதனையடுத்து, குறித்த நபர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணங்களை விளக்குமாறு அநுராதபுரம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.










