சுமார் 42 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஏலக்காய் மற்றும் 40 போத்தல் வெளிநாட்டு மதுபானங்களை வாகனத்தில் கொண்டு சென்றதாகக் கூறப்படும் இரு இந்தியப் பிரஜைகள் உட்பட மூவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை குரணை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 244.320 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 40 போத்தல் வெளிநாட்டு மதுபானங்கள் என்பன வாகனமொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 35 மற்றும் 47 வயதுடைய இரண்டு இந்தியப் பிரஜைகளும், கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொருட்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










