பாடசாலை முடியும் வரை பிள்ளைகளுக்காகக் காத்திருக்கும் தாய்மார்களின் நேரத்தை வருமானம் ஈட்டும் வாய்ப்பாக மாற்றி, பல குடும்பங்களின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க உதவும் முன்மாதிரியான திட்டமொன்றை பொலன்னறுவையைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் முன்னெடுத்துள்ளார்.
பொலன்னறுவை கல்வி வலயத்தின் லங்காபுர பிரிவில் அமைந்துள்ள புலஸ்திகம அபயபுர மகா வித்தியாலயத்தின் அதிபர் எச்.ரி. சந்தன குமாரவினால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் சுமார் 220 மாணவர்கள் கல்வி கற்பதுடன், அவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர், பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்து வரும் தாய்மார்கள், வகுப்புகள் நிறைவடையும் வரை அருகிலுள்ள கடைகளில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. இந்த நேரத்தில் அவர்களால் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இருக்கவில்லை.
தாய்மார்களின் இந்த நிலைமையை உணர்ந்த அதிபர் சந்தன குமார, பாடசாலையில் கைவிடப்பட்டிருந்த பழைய தையல் இயந்திரமொன்றைத் திருத்தி, வலயக் கல்வி அலுவலகத்தின் முறைசாரா கல்விப் பிரிவின் உதவியுடன் பெற்றோருக்கான தையல் பயிற்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதன்போது, பைகள், காற்சட்டைகள், ஆடைகள், தலையணை உறைகள், நுளம்பு வலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தயாரிப்பதற்கான பயிற்சிகள் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் சுயமாக வருமானம் ஈட்டுவதற்கான திறன்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்தத் திட்டம் விரிவடைந்ததைத் தொடர்ந்து, பெற்றோர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக பாடசாலையில் கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார, திட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இரண்டு புதிய தையல் இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தற்போது, 10 பெற்றோர்கள் ஒன்றிணைந்து ஆடைகளைத் தைப்பதற்கான ஓடர்களைப் பெற்று, தமது புதிய திறன்களின் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். அத்துடன், பாடசாலை வளாகத்திலேயே சீருடைகளைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளையும் அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அதிகளவான பெற்றோர்கள் பயனடையச் செய்வதுடன், எதிர்காலத்தில் மாணவர்களுக்கும் தையல் பயிற்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அதிபர் சந்தன குமார தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் கைவிடப்பட்டிருந்த ஒரு பழைய தையல் இயந்திரத்தில் ஆரம்பமான இந்த முயற்சி, இன்று பல தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வருமானம் ஈட்டும் திட்டமாக வளர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










