இந்திய இழுவைமடி படகுகளின் அட்டகாசம்

-யாழ் நிருபர்-

 

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4மீனவர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வெற்றிலைக்கேணியில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகள் தங்களது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது கரைக்கு அண்மையாக வந்த இந்தியன் இழுவைமடி படகுகள் அவர்களுடைய பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் இந்திய இழுவைமடி படகுகளை விரட்ட முனைந்தும் பாதுகாப்பற்ற காரணங்களால் அறுந்த மிகுதி வலைகளுடன் உடனடியாக கரைக்கு திரும்பினர்.

இரண்டு படகுகளுக்கு சொந்தமான வலைகள் எதுவும் மிஞ்சாததால் குறித்த இரண்டு படகுகளும் எந்தவொரு வலைகளும் இல்லாமல் வெறுமனே கரைக்கு திரும்பியதை காணக்கூடியதாக இருந்தது

மிகுதி இரண்டு மீனவர்கள் சொற்ப வலைகளுடன் அவர்களும் கரைக்கு திரும்பி வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரிடம் சம்பவம் குறித்து முறையிட்டனர்.

இந்திய இழுவை மடி படகுகளால் இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்ட மீனவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்தவருடம் எனக்கு சொந்தமான நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை இந்தியன் இழுவை மடி படகுகள் அறுத்துச் சென்ற போது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்

நஷ்ட ஈடு வழங்குமாறு கோரி வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளரிடம் கடிதம் கையளிக்கப்பட்டதற்கு பிற்பாடு இரு தமிழ் கட்சிகள் நஷ்ட ஈடு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாகவும் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் இந்திய படகுகள் தனது வலைகளை அறுத்து சென்றுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் குறித்து எமது பிரதேச செய்தியாளர் வெற்றிலைக்கேணி கடற்படை பொறுப்பதிகாரியை வினவிய போது,

அத்துமீறி இந்திய இழுவை படகுகள் கரைக்கு வந்த தகவல் அறிந்தும் ஒரு சில டோரா படகுகளின் உதவியுடன் தாம் விரட்டி அடித்ததாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் இனியும் அவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கில் இந்தியன் இழுவை மடி படகுகளின் அத்துமீறல்களை அண்மைக்காலமாக தடுத்து நிறுத்தியதாகவும், கச்சதீவு திருநாளை முன்னிட்டு பாதுகாப்பில் இருந்த சில டோரா படகுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இனி இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்