பெண்ணின் தலையில் பேன்: விமானம் அவசரமாக தரையிறக்கம்

பெண்ணின் தலையில் பேன் இருந்தமையால், விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டு 12 மணிநேரம் கழித்து மீண்டும் புறப்பட்டுச் சென்ற சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று, திடீரென பீனிக்ஸ் நகரில் அவசரமாக தரையிறங்கியது. கடந்த மாதம் 15-ம் திகதி நடந்த இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் அளித்த விளக்கத்தில், மருத்துவ காரணங்களுக்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஈதன் ஜுடல்சன் என்ற நபர் டிக்டாக் செயலியில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சம்பவம் நடந்தபோது அவரும் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறித்த முழுமையான விவரத்தை விமான நிறுவனம் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், “விமானத்தில் பயங்கரமான நிகழ்வு எதுவும் நடக்கவில்லை. யாரும் மயக்கமடையவில்லை, யாரும் பதற்றமடையவில்லை. ஆனால் விமானம் தரையிறங்கியபோது ஒரு பெண் விமானத்தின் முன்பகுதியை நோக்கி வேகமாக ஓடினார்.

இது குறித்து எனது சக பயணிகளிடம் நான் விசாரித்தபோது, விமானத்தில் இருந்த ஒரு பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக கூறி 2 பெண்கள் கூச்சலிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விமான ஊழியர்களிடமும் அந்த பெண்கள் முறையிட்டுள்ளனர். இதன் காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம், அடுத்த 12 மணி நேரத்தில் மீண்டும் இயக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவருக்கும் மீண்டும் அதே இருக்கைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஜுடல்சன், பேன்கள் குறித்து குற்றச்சாட்டு கூறிய 2 பெண்கள் அதே இருக்கை வேண்டாம் என்று வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்