-யாழ் நிருபர்-
திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் கடந்த 5 ஆம் திகதி இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளது.
கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற குறித்த கும்பல், இளைஞனை உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான இளைஞனை யாழ் பொஸ்கோ பாடசாலை அருகில் கொண்டு வந்து விடுவித்துள்ளனர்.
குறித்த கார் வேகமாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது வீதிக்கடமையில் இருந்த பொலிஸார் காரை இடைமறித்தபோது நிறுத்தாது வேகமாகச் சென்றுள்ளது.
சந்தேகமுற்ற பொலிஸார் குறித்த காரை துரத்திச் சென்று இடைமறித்து சோதித்துள்ளனர்.
சோதனையின் போது காருக்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன, அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளது, அத்துடன் ஒரு ‘சேட்’டும் இரத்தங்களுடன் மீட்கப்பட்டது.
இதையடுத்து பொலிஸார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில், 2.5 கிராம் ஐஸ் போதை பொருளும் மீட்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கடத்தப்பட்டு கைவிடப்பட்டு செல்லப்பட்ட இளைஞனை பொலிஸார் கண்டுபிடித்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.