யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாஸ்காந்

விஜயகாந்த் வியாஸ்காந் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரரும், நேர்ச்சுழல் பந்துவீச்சாளரும் ஆவார்.

இவர் 13 வயதின் கீழ் பிரிவிலேயே முதலாவது துடுப்பாட்ட போட்டியில் கலந்துகொண்டார். பின்னர் பல உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார்.

ஆரம்பத்தில் இவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதனை கண்டித்த இவரது தாயார் கல்வியில் அக்கறை செலுத்துமாறு அறிவுரை வழங்கினார். இருப்பினும் அவருக்கு கிரிக்கெட் மீதான அளப்பரிய ஈடுபாடு காரணமாக தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டார். இதன்போது தந்தையார் தான் இவருக்கு ஆதரவாக இருந்துள்ளார். அதன் பின்னர் தான் தாயார் இவருக்கு ஆதரவுகளை வழங்கியுள்ளார்.

இவர் 2020 டிசம்பர் 4 இல் 2020 லங்கா பிரிமியர் லீக் சுற்றில் யாழ்ப்பாணம் இசுடாலியன்சு அணிக்காக தனது முதலாவது இருபது 20 போட்டியில் விளையாடினார். 2021 நவம்பரில், யாழ்ப்பாணம் கிங்சு (முன்னைய இசுட்டாலியன்சு) அணியில் 2021 லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடத் தேர்தெடுக்கப்பட்டார். 2022 ஜூலையில், மீண்டும் 2022 லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் யாழ்ப்பாணம் கிங்சு அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொடரில் மொத்தம் 13 இலக்குகளைக் கைப்பற்றி, அதிக இலக்குகளை வீழ்த்திய வீரர்களில் ஒருவராக இருந்தார்.

2022 டிசம்பரில், வியாஸ்காந் வங்காளதேச பிரிமியர் லீக்கின் 2022-23 போட்டிகளில் சட்டோகிரம் சாலஞ்சர்சு அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2023 ஓகஸ்ட்டில், 2024 பன்னாட்டு லீக் இ20 சுற்றில் கலந்து கொள்வதற்காக எம்ஐ எமிரேட்சு அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இச்சுற்றில் இவர் 8 இலக்குகளைக் கைப்பற்றி, அவரது அணிக்கு மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக விளையாடினார்.

இவர் தனது முதலாவது முதல்-தரப் போட்டியை 2023 செப்டம்பர் 22 இல் தமிழ் யூனியன் அணிக்காக நொண்டெசிக்றிப்டு அணிக்கு எதிராக விளையாடினார்.

2024 ஐ.பி.எல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH) மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகளுக்கிடையிலான போட்டியில், சன்ரைசர்ஸ் அணியை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் யாழ் இளைஞன் விஜயகாந்த் வியாஸ்காந்த் களமிறங்கினார்.

ஐபிஎல் தொடரில் இந்த சீசனிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியிலிருந்து வனிந்து ஹசரங்க விலகுவதாக சிறிலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அந்த வெற்றிடத்திற்கு மாற்று வீரராக வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் அணியால் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்