திருகோணமலை-மொரவெவ பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-மொரவெவ பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் ஜகத் வேரகொடவினால் சமர்பிக்கப்பட்டது.

மொரவெவ பிரதேச சபை மொட்டு கட்சியினர் வசம் இருந்த போதிலும் பிரதேச மக்கள் மாற்றம் ஏதும் இடம் பெறலாம் என அதிகமாக எதிர்பார்த்து இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தங்க ராஜா ராசமணி தனது ஆதரவினை மொட்டுக்கட்சிக்கு வழங்கினார்.

இந்நிலையில் தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினை முன்னாள் பிரதேச சபை தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி ஆமோதித்த நிலையில் அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.

இதே வேளை ஜக்கிய தேசிய கட்சியின் மொரவெவ பிரதேச எதிர் கட்சி தலைவர் சாலிய ரத்னாயக்கவிற்கும், மொட்டு கட்சியின் உறுப்பினர் எஸ். சசிகுமார்.எம்.டி.ரத்னாயக்க ஆகியோருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் சபையின் தவிசாளரினால் சபை நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

அத்துடன், கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராக வாக்களித்திருந்த போதிலும் இம்முறை மொட்டு கட்சிக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதேச சபையின் தவிசாளர் ஜகத் வேரகொட இதன்போது தெரிவித்தார்.