மதில் பாய்ந்து வீடு செல்லும் ஆசிரியர் தொடர்பில் முறைப்பாடு

 

யாழ். வலய பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீடு செல்லும் ஆசிரியர் ஒருவரை தீவகப் பகுதியில் எவ்வாறு வளவாளராக நியமித்தீர்கள், என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் வட மாகாண கல்விப் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பினார்.

கடந்த புதன்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இடம் பெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஆளுநரின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளருடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரங்களில் மதில் பாய்ந்து வீட்டுக்கு செல்லும் ஆசிரியர் தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகளை கல்வி அமைச்சுக்கு வழங்கியிருந்தோம்.

ஆனால் குறித்த ஆசிரியர் மீது ஒழுக்காற்று விசாரணைகள் எவையும் இடம்பெறாத நிலையில் தீவக வலயத்திற்கு தமிழ் பாட வளவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புகள் இல்லாத ஒருவர் ஒரு வலயத்தின் ஆசிரிய வளவாளராக நியமிப்பதற்கு அனுமதி வழங்கியது யார் எனக் கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதில் அளித்த வடமாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார்,

ஆசிரியர்கள் பாடசாலையில் வெற்றிலை போடுவதாக எமக்கு பல முறைப்பாடுகள் வருகிறது, ஆசிரியர்களின் ஒழுக்கம் தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள் தான் வழிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.