சமுர்த்தி உத்தியோகத்தர் எனக்கூறி பணம் மோசடி : எச்சரிக்கை

-யாழ் நிருபர்-

சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோர்களையும், அரசினால் வழங்கப்படும் 20,000 ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களையும் இலக்கு வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது.

புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் எம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு வழங்குவோம் என கூறி முதியவர்களிடம் பணம் பறித்து செல்லும் சம்பவங்கள் உடுவில் கோப்பாய் வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மை நாட்களில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வயோதிப பெண் ஒருவரிடம் 19000 ரூபா பெற்றுச்சென்றுள்ளார்.

மேற்படி சம்பவம் இடம் பெற்றிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சரவணை பகுதியில் NP – 3125 இலக்க மோட்டார் சைக்கிளில் நடமாடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த நபர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்

எனவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஊர்காவற்துறை பிரதேச செயலக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிளில் சென்று நல்லூர் பகுதியில் ஏற்கனவே ஒருவர் மோசடி செய்திருந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஏழாலை பகுதியைச் சேர்ந்தவருடையது என அடையாளம் காணப்பட்டது.

விசாரணைகளின் போது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை தான் விற்பனை செய்ததற்கான ஆவணத்தை காண்பித்ததாக ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்