ரயிலில் மீட்கப்பட்ட குழந்தை : பெற்றோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொழும்பு-மட்டக்களப்பு ரயிலின் கழிப்பறையில் குழந்தையொன்று கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட் அக்குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் எதிர்வரும் 17 வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது,  நீதிவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேகநபர்களான தம்பதியினரும் அவர்களது பெற்றோரும் குழந்தையை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்ததால், அவர்களை பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் கோரிய போதிலும்இ நீதிவான் அதனை நிராகரித்துள்ளார்.

சம்பவத்தின் பிண்ணனி

கடந்த 11 ஆம் திகதி, கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்படவிருந்த மீனகயா ரயிலின் கழிப்பறையில் கைவிடப்பட்டிருந்த குழந்தையொன்று கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குழந்தையின் தாய் பண்டாரவளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரெனவும், தந்தை கொஸ்லந்தை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவரெனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டரீதியாக திருமணம் செய்துகொள்ளாத, குறித்த கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடந்த 13 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிவானின் உத்தரவுக்கமையஇ இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.