கிழக்கு ஆளுனர் – ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலீத் நாஸர் சுலைமான் அல் அமீரி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை மாலை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கிளையொன்றை நிறுவி ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்தி புதிய முறைமை ஒன்றை ஏற்படுத்துமாறும் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றுலா மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் அந்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் அவர்கள் கவனம் செலுத்தினர்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுற்றுலா வலயங்களில் புதிய விளம்பரத் திட்டங்களை முன்னெடுக்குமாறும் தூதுவர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த தகவலை மிக விரைவாக தெரியப்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருவதாக ஆளுநர் இதன் போது தெரிவித்தார்.

இதற்கிடையில், 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மற்றும் உலகின் மிக மதிப்புமிக்க கடல் பகுதிகளில் 10 மில்லியன் சதுப்புநில தாவரங்களை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அந்த திட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் கடல் பகுதியும் உள்ளடங்கும்.

திருகோணமலை சுற்றுலாப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளுக்காக, சுப்பர் மார்க்கெட் வளாகம் மற்றும் சொகுசு ஹோட்டல் வளாகம் தேவைப்படுவதால், முதலீட்டாளர் ஒருவரை தொடர்பு கொள்ளுமாறும் ஆளுநர் இங்கு கோரிக்கை விடுத்தார்.

குறித்த சந்திப்பின் இறுதியில் தூதுவருக்கும் ஆளுநருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ் ரத்நாயக்க, ஆளுநரின் உதவி செயலாளர் ஏ.ஜி.தேவேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.