நீண்ட கால காணிப்பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்படவேண்டும்

திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட காலமாக காணிப்பிரச்சினைகள் காணப்படுவதாகவும் குறிப்பாக சில காணிகளுக்கு துறைமுக அதிகார சபையும், சில காணிகளுக்கு தொல்பொருள் திணைக்களமும் உரிமை கோருவதாகவும் அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும், பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேட்டுக்கொண்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், திருகோணமலை மாவட்டத்தில் சீனக்குடா, கப்பல்துறை, முத்துநகர், சமதங்கபுர, மட்கோ, பூமுகார், சிங்கபுர, வெள்ளைமணல், கருமலையூற்று போன்ற பகுதிகளில் சுமார் முற்பதுனாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பிரதேசத்தில் காணப்படும் காணிகளை தற்போது துறைமுக அதிகார சபை உரிமைகோருகிறது.

இந்த காணியில் மக்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வசித்து வருகிறார்கள் வாக்களிக்கும் உரிமையும் அவர்களுக்கு இங்கேதான் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பதை துறைமுக அதிகார சபை தெரிந்து கொள்ளவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் முத்துநகர் பிரதேசத்தில் அரச வீட்டுத்திட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவுபடுத்துவதோடு, இந்த பிரதேச மக்கள் வீடுகளை கட்ட முடியாத நிலையும், மின்சாரம், நீர் வசதிகளை பெற முடியாத நிலையிலும் அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் இல்லாமல் துன்பங்களையும், துயரங்களையும் அனுபவிக்கின்றார்கள் என்பதை இச் சபைக்கு தெரியப்படுத்துவதோடு, இப்பிரதேச மக்களுடைய பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுத்தருமாறு காணி, துறைமுக அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள சுமார் ஒரு ஏக்கர் காணியில் 1970ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பொதுச் சந்தையொன்று குச்சவெளி பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்துள்ளது.

அதற்கான ஆவணங்களும் காணப்படுகின்றன. எனினும் 1990 ம் ஆண்டு யுத்தம் காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்த போது அச் சந்தையை இனந்தெரியாதோர் சேதப்படுத்தி, கொள்ளையிட்டிருக்கிறார்கள்.

அண்மையில் இந்த காணியில் குச்சவெளி பிரதேச சபையால் பொதுச்சந்தை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அந்த நடவடிக்கையை நிறுத்தியிருக்கிறார்கள் எனவும் இக்காணியை உரிமைகொள்ள தொல்பொருள் திணைக்களத்திடம் எந்த ஆவணங்களும் இல்லையெனவும், இந்த காணியில் பொதுச்சந்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துதரவேண்டும் எனவும் காணி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்