-அம்பாறை நிருபர்-
கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில், கல்முனை மாநகர சபை மந்த நிலையில் உள்ளதாக, பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துகள் ஏற்படுகின்றன. மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்படுகின்றது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில், கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட மாடுகளை அதன் சொந்தக்காரர்கள் வீடுகளில் அல்லது பண்ணைகளில் கட்டி வைத்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அறிவித்தல் ஒன்றினை ஏலவே விடுத்திருந்தும் பயனற்றதாகியுள்ளதாக, பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்.
அண்மையில் கல்முனை மாநகர சபையினால், கட்டாக்காலி கால்நடைகள் பிடிக்கப்பட்டு, மாநகர – பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொலிசாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன் போது, கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பலதடவைகள் அறிவுறுத்தியும் கவனத்தில் கொள்ளாமையினால், மாட்டு உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் சென்றிருந்தனர்.
இருந்த போதிலும், தற்போது அதிகளவான கட்டாக்காலி மாடுகள், தினமும் சந்தைக்கு வருகை தந்து பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரிங்களை ஏற்படுத்தி வருகின்றன.
எனவே, கல்முனை மாநகர பொதுச்சந்தையில், சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மீண்டும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
