தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்வு தற்காலிகமாகத் தாமதமடைந்துள்ள நிலையில், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாகத் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
நேற்று புதன்கிழமை தமிழக ஆளுநரைச் சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். எனினும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போதிய ஆதரவு கடிதங்கள் சமர்ப்பிக்கப்படாததால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இழுபறி நிலை நீடிக்கிறது.
இதனால் இன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அவசர ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆட்சி அமைக்கத் தேவையான மேலதிக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டுவது தொடர்பான வியூகங்கள்.
ஆளுநரின் கோரிக்கைக்கு இணங்க மேலதிக ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெறுதல்.
தற்போதைய அரசியல் சூழலில் கட்சியின் ஒற்றுமையைப் பேணுதல் மற்றும் அடுத்தகட்டத் திட்டங்கள் குறித்து உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்துதல்.
விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைவதில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்றைய கூட்டத்தின் முடிவுகள் மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக அமைந்துள்ளன.
இதேவேளை, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க திராவிட முன்னேற்றக் கழகம் எந்த வகையிலும் இடையூறாக அமையாது என அந்த கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசியலமைப்பு நெருக்கடி அல்லது மற்றுமொரு தேர்தலை திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் மு.க ஸ்டாலின் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் உருவாகியுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையைத் தொடர்ந்து, மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஆட்சியமைக்காத சூழலில், ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் பதற்றம் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அமைதியைப் பேண வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பாதுகாப்பு தரப்புகள் அறிவுறுத்தியுள்ளன.