மட்டக்களப்பில் போலியாக தங்க ஆபரணங்களை வடிவமைத்து அவற்றை வங்கியில் அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்த சந்தேகநபர் 9 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நகரில் தனியார் வங்கி ஒன்றில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தங்க ஆபரணங்களை பெண் ஒருவர் அடகு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
அதன் பின்னர் குறித்த தங்க ஆபரணம் போலியானது என வங்கி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இது குறித்து பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகளால் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தங்க ஆபரணங்களை அடகு வைத்த வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது அவரது கணவர் போலியாக தங்க ஆபரணங்களை வடிவமைத்துக் கொடுப்பவர் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து குறித்த பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தப்பியோடி தலைமறைவான நிலையில் பொலிஸார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த குறித்த சந்தேகநபர் சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை மதுபான கடை ஒன்றில் மது அருந்தி கொண்டிருப்பதாக பொலிஸாசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து குறித்த மதுபான கடையை சுற்றி வளைத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய பெரும் குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க தலைமையில் விக்னேஷ் உட்பட்ட குழுவினர் இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கைது செய்யப்பட்ட 45 வயதுடைய சந்தேகநபர் போலியான தங்க ஆபரணங்களை வடிவமைப்பவர் என தெரிய வந்துள்ளது.
அவரிடம் இருந்து தங்க ஆபரணங்களை வடிவமைக்கும் உபகரணங்களை மீட்டதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.