-மஸ்கெலியா நிருபர்-
நாட்டில் சில பகுதிகளில் மழை பெய்து வருவதால், நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பொகவந்தலாவ சென் மேரிஸ் கல்லூரிக்கு செல்லும் பிரதான வீதியில் பயணிப்பது சிரமமாக இருப்பதாக பாதசாரிகள் தெரிவிக்கின்றன.
பொகவந்தலாவ நகரில் இருந்து பாடசாலைக்கு செல்லும் பிரதான வீதியில், நகரில் இருந்து வரும் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் வழியாக செல்லாது வீதி வழியாக வழிந்தோடுகின்றது.
மழை நீர் கழிவுகளுடன் கலந்து வீதியில் வழிந்தோடுவதால், பாடசாலை மாணவர்கள் அவ்வீதி வழியாக பயணிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் இந்த விடயம் தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும் என அவ்வீதியால் பயணிப்பவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.