மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் உலகளாவிய ரீதியில் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன மற்றும் தொற்றுநோய் விபரவியல் நிபுணர் மருத்துவர் மஹேஷாக விஜயவர்தன ஆகியோர் தெரிவிக்கையில்,
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அவசர அறிவிப்பையடுத்து, இலங்கைக்குள் இந்நோய் நுழைவதைத் தடுப்பதற்காகச் சுகாதார அமைச்சு 5 கட்டத் தயார்நிலைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
வானூர்தி நிலையங்கள் மற்றும் சர்வதேச நுழைவாயில்களில் கண்காணிப்பை பலப்படுத்துதல்.
சந்தேகத்திற்கிடமான நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அங்கொடை தேசிய தொற்றுநோய் அறிவியல் நிறுவனத்தை தயார் நிலையில் வைத்திருத்தல்.
ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் நோய் நிர்ணயப் பணிகளுக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை தயார் படுத்துதல்.
நாடளாவிய ரீதியில் நோய் கண்காணிப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல்.
உலகளாவிய நிலைமைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து நெருக்கமாகச் செயலாற்றுதல்.
இலங்கையில் இதுவரை எந்தவொரு எபோலா நோயாளரும் அடையாளம் காணப்படவில்லை என்றும், இந்நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இது குறித்துத் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லை என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது பரவி வரும் எபோலா வைரஸானது ‘Bundibugyo strain’ என்ற வகையைச் சேர்ந்ததாகும். இவ்வகை வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்தியேக மருந்துகளோ கண்டறியப்படவில்லை என்பதே தற்போதைய பிரதான கவலையாகும் என மருத்துவர் மஹேஷாக விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, உலக சுகாதார நிறுவனம் இந்நோய் பரவலை ‘சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சுகாதார அவசர நிலை’ (PHEIC) எனப் பிரகடனப்படுத்தியுள்ளது.
எபோலா வைரஸ் காற்று வழியே பரவும் ஒரு நோய் அல்ல. பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம், உடல் திரவங்கள் அல்லது அவர்களால் அசுத்தமடைந்த பொருட்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலமே இந்நோய் பரவுகிறது.
வைரஸ் தொற்று ஏற்பட்டு 2 முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். திடீர் காய்ச்சல், குளிர் நடுக்கம், கடுமையான உடல் பலவீனம், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். தீவிர நிலைகளில் சிலருக்கு உடலில் இரத்தக் கசிவு அல்லது தழும்புகள் ஏற்படலாம்.
எபோலா நோய் பரவல் உள்ள நாடுகளிலிருந்து இலங்கை திரும்பும் பயணிகள், நாட்டிற்கு வந்து 21 நாட்களுக்குள் மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தங்களது பயண வரலாற்றைச் சுகாதார அதிகாரிகளுக்குத் துல்லியமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.