புலமைப்பரிசில் பரீட்சை: நள்ளிரவு முதல் பயிற்சி வகுப்புகள் விரிவுரைகளுக்குத் தடை
எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான பயிற்சி வகுப்புகள், செயலமர்வுகள் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, யூக கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் மின்னணு, அச்சிடப்பட்ட அல்லது சமூக ஊடக தளங்களில் உள்ளடக்கம் போன்ற விளம்பரங்களை வெளியிடுவதற்கும் வைத்திருப்பதற்கும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகின்றன.
இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபரும், அமைப்பும் அல்லது தரப்பினரும் கண்டறியப்பட்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என ஜயசுந்தர வலியுறுத்தினார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.