மட்டக்களப்பில் இடம்பெற்றதாக கூறப்படும், 5 மனித கொலை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான உள்ளிட்ட சந்தேகநபர்களை, எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, இன்று திங்கட்கிழமை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த 2025 ஏப்ரல் 7ம் திகதி கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணையில், பிள்ளையானின் வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பான இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளின் படி,
- 2006 ம் ஆண்டு கல்லடி பிரதேசத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை.
- பிள்ளையான் குழுவினரால் கப்பம் கோரப்பட்ட பணத்தை வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை.
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிள்ளையானின் சொந்தக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்படமை
- கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பில் வைத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் அப்போதைய உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை
போன்ற கொலைகள் தொடர்பில், பிள்ளையானைத் தொடர்ந்து, இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளாக செயற்பட்டு வந்த காத்தான்குடியை சேர்ந்த முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோரை, கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இருவர் உட்பட 3 பேர் மீது வழக்கு தாக்கல் செய்த விவரங்கள் அடங்கிய விசேட அறிக்கை இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவானிடம், பிள்ளையானின் பாதுகாப்பு காரணமாக அவரை நீதிமன்றுக்கு அழைத்து வர முடியாத நிலை இருப்பதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பிள்ளையாணை சூம் இணையவழி ஊடாக விசாரணை மேற்கொண்ட நீதவான், மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை பிள்ளையான் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக இந்த வழக்கு தொடர்பான விபரங்கள் ஏற்கனவே கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையானின் மிக நெருங்கிய தோழரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான இனியபாரதி என அழைக்கப்படும் கே.புஷ்பகுமார் என்பவருக்கு எதிராக 7 மனிதக் கொலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் வழக்குகளின் சான்றுகளை அழிப்பதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்திற்கு தீ வைத்த சம்பவத்திலும், பிள்ளையான் மற்றும் அவரது குழுவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டு, இனியபாரதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிள்ளையானை நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற பகுதியை சுற்றி விசேட அதிரடிப்படையினர் பொலிசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.