வட கடல் நிறுவன ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

குருநகர் வடகடல் நிறுவன ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

தேவையற்ற செலவுகளால் ஊழியர்களின் ஊதியம் சுரண்டப்படுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளாக பொது முகாமையாளர் நியமிக்கப்படவில்லை, நூல் கொள்வனவின்போது கொள்வனவு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, நிறுவன ஊழியர்களின் நலனை காக்கும் சிறந்த தலைவரை எமக்கு தாருங்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த நிறுவன ஊழியர்கள் கடந்த மாதமும் வடகடல் நிறுவனத்திற்கு முன்னால் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் பேரணியாக யாழில் உள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர்.

இதன்போது முன்னாள் அமைச்சர், இரண்டு வாரங்களில் அவர்களுக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.