2026 இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் ஏனைய சர்வதேச லீக் தொடர்களில் பங்கேற்பதற்காக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து தடையின்மைச் சான்றிதழை பெற்றுத் தருமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார மீளப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த மனு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரின் பல போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால், இந்த மனுவை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்ல மனுதாரர் விரும்பவில்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டத்தரணியின் சமர்ப்பிப்பை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியதுடன், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம், கிரிக்கெட் சபைக்கு எதிராக அவர் கோரியிருந்த இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன.