ரயில் திணைக்களத்தின் சகல ஊழியர்களினதும் விடுமுறை உடனடியாக ரத்து

 

அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரயில் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி வெளியிட்பட்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2321/07 இன் படி/ தொடரூந்து சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி/ 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரயில் சேவையின்/ அனைத்து ஊழியர்களினதும் விடுமுறையை இன்று செவ்வாய்க்கிழமை முதல் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கு ரயில் பொது முகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவையை தடையின்றி, வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்ல நாளை புதன்கிழமை பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களிடமும் அது தொடர்பான அறிக்கையை கோருமாறு ரயில் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.