மட்டக்களப்பு – ஏறாவூர் நீதவான் நீதிமன்ற வளாகத்தில், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிய நபர், பொலிஸாரால் துரத்திப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் வழமை போன்று பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர், பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கியை (Handgun) திடீரெனப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
நீதிமன்ற வளாகத்திலேயே இடம்பெற்ற இந்தத் துணிகரச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.
உடனடியாகச் செயற்பட்ட நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் அங்கிருந்த பொலிஸார், தப்பியோடிய சந்தேக நபரை நீண்ட தூரம் துரத்திச் சென்று வெற்றிகரமாக மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதோடு, அவர் தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
குறித்த நபர் எதற்காகத் துப்பாக்கியைப் பறித்தார்? இதன் பின்னணியில் ஏதேனும் திட்டமிட்ட சதி உள்ளதா? என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.