அளுத்கம, களுவாமோதர பகுதியில் சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்த 44 வயதுடைய நபரை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹிக்கடுவ தேசிய பூங்கா தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவருக்கு 70,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்று உத்தரவிட்டது.
முதலைக் குட்டியை பொருத்தமான சூழலில் விடுவித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அத்திடிய வனவிலங்கு கால்நடை மருத்துவருக்கும் நீதவான் உத்தரவிட்டார்.
விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முதலைகள் கண்டிப்பாக பாதுகாக்கப்பட்ட ஊர்வன என்று வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பிப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் தனிநபர்கள் முதலைக் குட்டிகளை வைத்திருப்பது சில காலமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது
இதுபோன்ற குற்றவாளிகளைக் கைது செய்ய, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருவதாக, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.