யாழ் தெல்லிப்பளை பகுதியில் நேற்றிரவு பதற்றம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு -வீடியோ இணைப்பு-

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள சிசிரிவி காணொளிகளை கொண்டு வன்முறைக் கும்பலை தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திங்கள் இரவு முதல் தெல்லிப்பளை மற்றும் மல்லாகம் பகுதிகளில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தனக்கு தொடர்பில்லை என தெரிவித்து ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு சரணடைந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் தனது காருக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது இன்று மாலை 5.30 மணியளவில் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து வன்முறை கும்பல் ஹயஸ் வானில் மருதனார்மடம் நோக்கி தப்பிச் செல்லும் போது துரத்தி சென்ற பொலிஸார் மல்லாகம் பகுதியில் வாகனத்துக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்.

மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம் அருகில் வீதியில் இருந்து வாள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பனவும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வாள்வெட்டில் காயமடைந்த 28 வயதான இளைஞர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்