‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களான ‘ஹரக் கட்டா’ என்ற நந்துன் சிந்தக்க மற்றும் ‘குடு சலிந்து’ என்ற சலிந்து மல்சித்த ஆகியோரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு இன்று புதன்கிழமை காலை நாட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

மடகஸ்காரில் கைது செய்யப்பட்ட ஹரக் கட்டா மற்றும் அவரது சகாவான குடு சலிந்து ஆகியோரை நாடு கடத்துவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த வார தொடக்கத்தில் ஆபிரிக்க நாடான மடகஸ்காருக்கு குழுவொன்றை அனுப்பியது.

இந்த நிலையில் குறித்த இருவரும் இந்தியாவின் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்தனர்.

எனினும்இ குற்றப்புலனாய்வு குழுவினரின் விமானம் தாமதமானதன் காரணமாக நாடு திரும்புவதை இன்றுவரை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில்  இன்று காலை அவர்கள்  ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 142 என்ற விமானம் மூலம்  மும்பை ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்ததடைந்ததாக  விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ உட்பட 8 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கடந்த 8 ஆம் திகதியன்று மடகாஸ்கரில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

கடந்த முதலாம் திகதி மடகஸ்காரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஹரக் கட்டாவின் மனைவி என கூறப்படும் மலகாசி பெண் ஒருவரும் அவரது தந்தையும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மடகஸ்காரில் உள்ள முன்னணி ஊடக வலையமைப்பான L’Express, சந்தேகநபர்கள் மடகாஸ்கரின் அண்டனானரிவோவில் உள்ள இவாடோ சர்வதேச விமான நிலையத்தில்  நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தபோது கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச பொலிஸின் (இன்டர்போல்) தேசிய மத்திய பணியகம் (NCB), மடகஸ்காரின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த ஐந்து சந்தேக நபர்கள் கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி ஒரு தனியார் ஜெட் விமானத்தில் Nosy Be இல் தரையிறங்கினர். பின்னர் அந்த குழு அடுத்த நாள் உள்நாட்டு விமானத்தில் அண்டனானரிவோவுக்கு பயணித்தது.

இரண்டு விடுதிகளில் தங்கியிருந்த சந்தேக நபர்கள் இரண்டு சொகுசு கார்களில் இவாடோ விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஜென்டர்ம்ஸ் (பிரெஞ்சு காலனித்துவ நாடுகளில் உள்ள துணை இராணுவ காவல்துறை அதிகாரிகள்) முன்னதாக, இண்டபோலினால் வெளியிடப்பட்ட சிவப்பு அறிவிப்புகளின் உதவியுடன் அவர்களை அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.

மடகஸ்காரில் அவர்கள் தங்கியிருந்த காலத்தில், ‘ஹரக் கட்டா’ ஒரு கோடீஸ்வர தொழிலதிபராகக் காட்டிக்கொண்டார். அதே நேரத்தில் ‘குடு சலிந்து’ உள்ளிட்ட ஏனையோர் அவரது மெய்க்காப்பாளர்களாக நடித்தனர்.

இரண்டு சொகுசு கார்கள் மற்றும் சந்தேக நபர்களின் கைபேசிகளும் மடகஸ்கார் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

மேலும்  ‘ஹரக் கட்டாவின்’ மனைவி எனக் கூறப்படும் பெண்ணிடம் இருந்து 32 மில்லியன் மலகாசி அரிரி (MGA) பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், இலங்கைக்கு தூதரகமோ அல்லது உயர் ஸ்தானிகராலயமோ மடகஸ்காரில் இல்லாததால் கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கு சீஷெல்ஸின் விக்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர்  ஒரு உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் அடங்கிய உள்ளூர் சட்ட அமுலாக்க அதிகாரிகள் குழு இரண்டு விசேட அதிரடிப்படையினருடன் மடகஸ்காருக்கு புறப்பட்டது.

துபாய், மலேசியா, சிங்கப்பூர், சீஷெல்ஸ், மாலைதீவுகள் மற்றும் மடகஸ்கார் ஆகிய நாடுகளில் தனது போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் ‘ஹரக் கட்டா’ முன்னதாக 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், அவர் துபாயில் இருந்த போது பயன்படுத்த கடவுச்சீட்டில் தனது பெயரை ஹேரத் திஸாநாயக்ககே ரொஷான் இசங்க என மாற்றியிருந்தார்.

அவரை நாடு கடத்துவது தொடர்பான சட்டபூர்வ விடயங்களை பூர்த்திசெய்ய முடியாததால், துபாய் பொலிஸ்  ஹரக் கட்டாவை கடந்த 2022 அக்டோபர் 03 ஆம் திகதியன்று விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.