கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: இம்ரான்

-மூதூர் நிருபர்-

தற்போது வழங்கப்படும் கிராம உத்தியோகத்தர் நியமனத்துக்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அசோக பிரியந்தவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை பிரதியமைச்சரைச் சந்தித்து இவ்வேண்டுகோளை அவர் முன்வைத்தார்.

கிராம உத்தியோகத்தர் நிமயனத்திற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் நியமனம் பெறும் எண்ணிக்கையினரை விட அதே போன்ற ஒரு மடங்கு தொகையினர் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி கிண்ணியாவிலிருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனவே, 5 அல்லது 6 பேருக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும். எனினும் தற்போது இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படுகின்றது. ஏனைய பிரதேச நியமனங்களோடு ஒப்பிடுகையில் கிண்ணியா பிரதேசத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து மீள் பரீசீலனை செய்ய வேண்டுமென இம்ரான் எம்.பி பிரதியமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

இந்த விடயத்தை செவிமடுத்த பிரதியமைச்சர் ஏதோ தவறு நடந்து விட்டதாக உணர்கின்றேன். இது குறித்து நடவடிக்கை எடுக்கின்றேன் என உறுதியளித்தார் என்ன திருமணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்